நீர்நிலைகளில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


நீர்நிலைகளில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2020 11:00 PM GMT (Updated: 26 Feb 2020 9:00 PM GMT)

காரிமங்கலம் அருகே நீர்நிலைகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரிமங்கலம்,

காரிமங்கலம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்படுகிறது. காரிமங்கலம் பகுதியில் பல ஏரிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன்களுக்கு கோழி கழிவுகள் கொடுத்து வளர்ப்பதால் வேகமாக வளர்ந்து பெரிதாகி விடுகிறது.

இதேபோல் விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்த்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. காரிமங்கலம் பேரூராட்சி ராசப்பக்குட்டையில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை சிலர் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்கள். ஏரிகள், பண்ணை குட்டைகளில் இருந்து பிடிக்கப்படும் கெளுத்தி மீன்களை சாலையோர கடைகளிலும், மதுக்கடைகள் அருகிலும் அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காரிமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுகிறது.

இந்த மீன்களுக்கு கோழி கழிவுகள் அதிக அளவில் கொட்டுவதால், நீர்நிலைகளில் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story