கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்


கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 Feb 2020 4:30 AM IST (Updated: 27 Feb 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-இந்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தை 2011-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தி உள்ளது. இதன் நோக்கம், பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல், உணவு பொருள் தயாரிப்பு தொழிலகங்களில் உணவு பொருளின் தயாரிப்பும், தரமும், தற்கால அறிவியல் வளர்ச்சியையொட்டி உணவு பொருள் பதப்படுத்தும் நடைமுறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

உரிமம் பெற்ற கடை

உணவு தொழில் புரிவோரை பதிவு சான்று அல்லது உரிமம் பெற்று தரமான உணவு பொருள் கிடைக்க செய்தல், கலப்பட, காலாவதியான உணவு பொருட்களை தடை செய்தலே ஆகும். மேலும், நுகர்வோர்கள் பதிவுச்சான்று, உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உணவு பொருட்களை வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.

தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி, சாம்பார், ரசம் விற்கவோ, வாங்கவோ வேண்டாம். கடைகளில் உணவு பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்ய கூடாது. உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை திரும்ப பயன்படுத்த கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து நுகர்வோர் விழிப்புணர்வு கையேட்டை கலெக்டர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story