ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது - இணைஇயக்குனர் பேச்சு
ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என்று ஆசிரியர் தேர்வு வாரிய இணைஇயக்குனர் சசிகலா தெரிவித்தார்.
திருப்பூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 2-ந்தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 4-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு குறித்த அறிவுரைக்கூட்டம் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை ஆகிய 4 கல்வி மாவட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாவட்ட பொதுத்தேர்வுக்கான பொறுப்பாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய இணைஇயக்குனருமான சசிகலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடர்பாக தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆய்வு அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களுக்கான கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் அவரவர் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் அறிவுரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி அனைத்து ஆசிரியர்களும் மிக கவனமாக பணியாற்ற வேண்டும். ஒரு சிறு புகார் கூட ஏற்படாத வகையில் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். வினாத்தாள் கொண்டு செல்லும் வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் காப்பாளர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் உள்பட யாரும் செல்போன் உபயோகிக்கக்கூடாது. அவசர தேவைக்கு பள்ளியில் உள்ள தொலைபேசியை உபயோகித்து கொள்ள வேண்டும்.
தேர்வின்போது காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஒரு பள்ளியில் தேர்வு பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டும் அதே பள்ளியில் பணி ஒதுக்கி தரக்ககூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் தேர்வு பணியில் ஈடுபடஉள்ள 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story