குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிலாளர்கள் 10-வது நாளாக போராட்டம்


குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிலாளர்கள் 10-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 10:30 PM GMT (Updated: 26 Feb 2020 10:08 PM GMT)

குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 10-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, சிற்றார் உள்ளிட்ட இடங்களில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2016 டிசம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் நடந்த 40-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே சம்பள உயர்வு வழங்கக்கோரி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 17-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் ரப்பர் பால் வடித்தல் பணி மற்றும் ரப்பர் தொழிற்சாலையில் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை 3 முறை நடந்தது.

10-வது நாளாக...

அதாவது நாகர்கோவில் தொழிலாளர் நல அலுவலகத்தில் 2 முறையும், தோவாளையில் தமிழக அரசின் ெடல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் ஒரு முறையும் என மொத்தம் 3 முறை நடந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு இடைக்கால ஊதியமாக உயர்த்தப்பட்ட 24 ரூபாயில் இருந்து கூடுதலாக 17 ரூபாய் சேர்ந்து மொத்தம் 40 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் இந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால் ேவலை நிறுத்த போராட்டம் முடிவடையவில்லை. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று 10-வது நாளாக நீடித்தது. ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வேலைக்கு செல்லாததால் 100 டன்னுக்கும் அதிகமாக ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். அதாவது சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ரப்பர் கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Next Story