கருத்து கேட்பு கூட்டத்தில் மீன்வள மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு மீனவ பிரதிநிதிகளிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை


கருத்து கேட்பு கூட்டத்தில் மீன்வள மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு மீனவ பிரதிநிதிகளிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 27 Feb 2020 12:00 AM GMT (Updated: 26 Feb 2020 10:20 PM GMT)

நாகர்கோவிலில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மீன்வள மசோதாவுக்கு மீனவ பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு மீன் வளத்துறை சார்பில் தேசிய கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) வரைவு மசோதா- 2019 தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மீன்வளத்துறை துணை இயக்குனர் இளம்வழுதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முதலில் மசோதாவை படக்காட்சிகள் மூலமாக அதிகாரிகள் விளக்கினார்கள். அதன்பிறகு மீனவ பிரதிநிதிகள் கூறிய கருத்துகளின் விவரம் வருமாறு:-

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கடல் மீன்வள வரைவு மசோதாவில் 12 நாட்டிக்கல் மைல் வரை மீன்பிடிக்கலாம் என்றும், அதற்கு மேல் சென்றால் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. ஆனால் குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க கூடியவர்கள். அதாவது சுமார் 200 நாட்டிக்கல் மைல் தாண்டி சென்று மீன்பிடிப்பார்கள். எனவே இந்த மசோதாவால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் சென்று மீன்பிடிக்க தேவையான அனுமதியை எப்படி பெற வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.

ஏகோபித்த அதிகாரம்

கடலில் தொழிலுக்கு செல்லும் மீனவர் இறந்து விட்டால் அவருடைய குடும்பத்தின் நிலையை மேம்படுத்த எந்த வழிகளும் மசோதாவில் சொல்லப்படவில்லை. மேலும் மசோதாவில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் கடலுக்கு சென்று மீனவர்களின் படகுகளை ஆய்வு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது அனுமதி அல்லது ஆவணங்கள் இன்றி மீன்பிடித்தால் படகின் உரிமையாளர் அல்லது படகின் மாஸ்டர் மீது வழக்கு பதிவு செய்து தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க மசோதாவில் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

அதோடு மட்டும் அல்லாது அதிகாரிகளுக்கு ஏகோபித்த அதிகாரத்தை மசோதா வழங்குகிறது. இதன் மூலம் மீனவர்கள் தவறு செய்யாமலேயே தண்டிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நடந்தால் மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். ஏன் எனில் மீனவர்களுக்கு மீன்பிடித்தலை தவிர வேறு தொழில் தெரியாது. மசோதாவில் மீனவர்களுக்கு எதிரான விஷயங்கள் மட்டுமே உள்ளன. எனவே தேசிய கடல் மீன்வள வரைவு மசோதாவுக்கு எங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மீனவ பிரதிநிதிகள் கூறினர்.

அரசுக்கு அனுப்பி வைப்போம்

இதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறுகையில், “மீனவ பிரதிநிதிகள் கூறிய அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் சரி எது? தவறு எது? என்று நாங்கள் பார்க்க மாட்டோம். அனைத்தையும் அப்படியே அரசுக்கு அனுப்பி வைப்போம். 12 நாட்டிக்கல் மைலுக்குள் தான் மீன் பிடிக்க வேண்டும் என்று மசோதாவில் சொல்லப்பட்டது போல தெரியவில்லை. கருத்து கேட்பு கூட்டத்தை அமைதியாக நடத்தினால் தான் நன்றாக இருக்கும் என்றார்.

கலெக்டர் பேச்சுவார்த்தை

முன்னதாக கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகளும் தேசிய கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பினர். மேலும் கூட்டத்தை விட்டு வெளியேற போவதாகவும் கூறினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே எழுந்து நின்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதாவது, “உங்களின் எதிர்ப்பு எனக்கு புரிகிறது. ஆனால் இந்த கருத்துகேட்பு கூட்டம் ஏதோ நடைமுறைக்காக நடத்தப்படவில்லை. உங்களுடைய கருத்தை கேட்கத்தான் நான் வந்துள்ளேன். எனவே உங்கள் கருத்தை கூறுங்கள். நீங்கள் கூறும் ஒவ்வொரு கருத்தையும் நாங்கள் பதிவு செய்து அரசுக்கு அனுப்புவோம். ஆனால் கருத்து கூறாமல் வெளியேறினால், வெளியேறினார்கள் என்று தான் அனுப்ப முடியும். நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள்“ என்றார்.

இதைத் தொடர்ந்து அனைவரும் மீண்டும் இருக்கையில் அமர்ந்தனர். பின்னர் ஒவ்வொருவராக எழுந்து கருத்துகளை கூற தொடங்கினர். முடிவில் தங்களது மனுவை கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்தனர்.


Next Story