மாறி வரும் சூழலில் விழிப்புணர்வு அவசியம் மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை


மாறி வரும் சூழலில் விழிப்புணர்வு அவசியம் மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை
x
தினத்தந்தி 27 Feb 2020 12:00 AM GMT (Updated: 27 Feb 2020 12:00 AM GMT)

மாறி வரும் சூழலில் விழிப்புணர்வு அவசியம் என்று மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கினார்.

புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி பேசியதாவது:-

பன்முகத்தன்மை

புதுவை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது மட்டுமின்றி செயல்பாடுகளில் அற்புதமான வளர்ச்சியை கண்டு உலகத்தரமான பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது. மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் உயர்கல்வி பெறவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் வகையில் கூடுதல் பட்ட வகுப்புகளை தொடங்கியுள்ளது. பணிச்சூழலில் தேவைகள் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் வாழ்நாள் முழுக்க கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற பரவலான அணுகுமுறைக்கு ஏற்றதாக இது உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக கல்விச்சூழலை பன்முகத்தன்மை கொண்டதாக ஆக்கியுள்ளனர்.

அலங்கார கோபுரங்கள்

பல்கலைக்கழகங்கள் அலங்கார கோபுரங்கள் என்பதுபோல இருந்துவிட முடியாது. இருந்துவிடக்கூடாது. அறிவு என்ற பரந்தவெளியை விரிவுபடுத்தும் நிறுவனங்களாக உள்ளன. அவை கல்வி அறிவு, சமூக, பொருளாதார விஷயத்தில் ஆழமான வேர்களை கொண்டதாக இருந்து, அறிவு என்ற வாசனையை உலகம் எங்கும் பரப்புவதாக இருக்கவேண்டும்.

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் செம்மையான நிலையை எட்டுவதை நோக்கமாக கொண்டுள்ள எந்த பல்கலைக்கழகமும், அறிவு புரட்சியில் முன்னணியில் இருக்கவேண்டும். உலகெங்கும் உள்ள புதிய போக்குகள் மற்றும் புதுமையான சிந்தனைகளை அறிந்துகொள்வதற்கு பல்கலைக்கழகம் கதவுகளை திறந்து வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

முதல் படிக்கட்டு

பட்டங்கள் என்பது அங்கீகாரத்துக்கான ஓர் அடையாளம். படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறீர்கள் என்பதற்கான அங்கீகாரம் இது. இது வெறுமனே முதல் படிக்கட்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட கனவுகளை நோக்கிய பயணத்துக்கான ஊக்க சக்தியாக மட்டுமே இது உள்ளது.

தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சூழலில் நீங்கள் விழிப்போடு இருக்கவேண்டியது அவசியம். புதிய விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் திறன் இருக்கவேண்டும். உங்களுடைய துறையில் உலக அளவில் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப நீங்கள் தகவமைப்பு செய்துகொள்ள வேண்டும். சிறப்பான செயல்திறனை காட்டுவதற்கு முயற்சிக்கவேண்டும்.

புதிய உச்சங்களை தொட...

ஆக்கப்பூர்வ சிந்தனை உள்ளவராக புதிய உச்சங்களை தொட முன்னேறி செல்பவராக இருக்கவேண்டும். உங்கள் இலக்குகளை எட்டுவதற்கு நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். கல்வி என்பது ஞானம் தருவதாக இருக்கவேண்டும். வெறுமனே வேலைவாய்ப்பினை தருவதாக இருக்கக்கூடாது.

எந்த கல்வி முறையிலும் கற்பிக்கப்படும் பாடங்கள் மிகவும் முக்கியம் பெறுகின்றன. ஆனால் நாம் அதையும் தாண்டி சென்றாக வேண்டும். யுனெஸ்கோ 4 வழிகளை அறிவுறுத்தி உள்ளது. அறிவதற்காக கற்றல், செய்வதற்காக கற்றல், வாழ்வதற்காக கற்றல், ஒன்றாக வாழ்வதற்காக கற்றல் என 4-ம் சம அளவு முக்கியமானவை. இப்போதைய சூழலில் அனைத்து மக்களுடன் ஒன்றாக வாழ்வது என்பது 4-வது அம்சம்.

5 அம்சங்கள்

இந்த கற்றல் நடைமுறையில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. முழுமையான வளர்ச்சிக்கான கற்றல் நடைமுறை, குறைகூற முடியாத நிர்வாகம், சிறப்பான கல்வி நிலைய மேலாண்மை, நன்கு கட்டமைக்கப்பட்ட பாராட்டுகள் மற்றும் திருத்த நடவடிக்கைகள், உரிமையுள்ளவர்கள் பயன்பெறவும், தவறானவர்கள் அகற்றப்படுவதற்கான கல்வி நிலைய சூழ்நிலை ஆகிய 5 அம்சங்களுக்காக நீங்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், கோகுலகிருஷ்ணன் எம்.பி., சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, அரசு செயலாளர்கள் அன்பரசு, சுந்தரேசன், கலெக்டர் அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story