நன்னிலம் ஒன்றிய ஆணையர்களை கண்டித்து தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


நன்னிலம் ஒன்றிய ஆணையர்களை கண்டித்து தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2020 4:30 AM IST (Updated: 27 Feb 2020 10:13 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் ஒன்றிய ஆணையர்களை கண்டித்து தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்னிலம்,

நன்னிலம் ஒன்றிய ஆணையர்களை கண்டித்தும், தி.மு.க. ஊராட்சி தலைவர்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், மக்களுக்கு பணியாற்ற முடியவில்லை என்பதை வலியுறுத்தியும் தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் நன்னிலம் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வரத கோ.ஆனந்த், மனோகரன், நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உதுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார், தாசில்தார் அலுவலகம் முன்பு அனுமதி அளித்தனர். ஆனால் தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் அனுமதி வழங்காத ஒன்றிய ஆணையர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ராமேரிக்கும், தி.மு.க.வினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆணையர் அலுவலகம் வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், குணசேகரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கணபதி, முன்னாள் ஊராட்சி தலைவர் பாலமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story