திருவாரூரில், 7-ந் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சருக்கு பட்டம் வழங்கப்படும் ரங்கநாதன் பேட்டி


திருவாரூரில், 7-ந் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சருக்கு பட்டம் வழங்கப்படும் ரங்கநாதன் பேட்டி
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 6:38 PM GMT)

திருவாரூரில், வருகிற 7-ந் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சருக்கு பட்டம் வழங்கப்படும் என்று மன்னார்குடி ரங்கநாதன் கூறினார்.

கொரடாச்சேரி,

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கு வருகிற 7-ந் தேதி(மார்ச்) விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருவாரூரில் பாராட்டு விழா நடத்த உள்ளன. இதற்காக நேற்று திருவாரூர் வன்மீகபுரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ள திடலில், பந்தக்கால் ஊன்றி பணிகள் தொடங்கப்பட்டன.

பந்தக்கால் நடும் விழாவில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்க தலைவர்கள் சத்தியநாராயணா, நன்னிலம் சேதுராமன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் மன்னார்குடி ரங்கநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நம்பிக்கை விவசாயிகளுக்கு வந்துள்ளது

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டங்களை கடந்த சில ஆண்டுகளில் விரைவுபடுத்தியதை கண்டு விவசாயிகள் அச்சமடைந்திருந்த சூழ்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, குறுகிய நாட்களிலேயே சட்டமன்றத்திலும் மசோதாவை நிறைவேற்றி உள்ளார்.

விவசாயத்துக்கு எதிர் காலம் போய்விட்டதாக கருதிய நிலையில், தமிழக முதல்-அமைச்சரின் இத்தகைய நடவடிக்கையால் இன்னும் 10 ஆயிரம் ஆண்டு காலத்துக்கு விவசாயம் நல்ல முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு வந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிகுந்த பணிக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஊக்குவிப்பு செய்துள்ளார். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

பட்டம் வழங்க உள்ளோம்

இதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து, திருவாரூரில் பாராட்டு விழா வருகிற 7-ந் தேதி(மார்ச்) நடத்த உள்ளோம். ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு பாராட்டு விழா நடத்தப்பட்டபோது, அவருக்கு பட்டம் வழங்கி கவுரவித்ததை போன்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் பட்டம் வழங்க உள்ளோம். என்ன பட்டம் வழங்க உள்ளோம் என்பதை அன்றைய தினம் தெரியப்படுத்துவோம்.

இந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், விவசாயிகள் சங்க தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாவில், விவசாயிகளும் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story