பந்தலூரில், சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது - தாய், தங்கை மீது வழக்கு


பந்தலூரில், சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது - தாய், தங்கை மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 28 Feb 2020 12:10 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூரில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்ததாக அவரது தாய், தங்கை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பந்தலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் அஜித் குமார்(வயது 20). இவருக்கு, நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த 17 வயது சிறுமி முகநூல் மூலம் அறிமுகமானாள். இருவரும் முகநூலில் நட்பாக பேசி வந்தனர். பின்னர் அடுத்த சில நாட்களில் சிறுமியிடம் ‘உன்னை நான் காதலிக்கிறேன்’ என்று அஜித்குமார் தெரிவித்து உள்ளார். அவரது காதலை சிறுமியும் ஏற்று கொண்டாள். இருவரும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமியை அஜித்குமார் வற்புறுத்தி வந்தார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர், சேரம்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன சிறுமி, அஜித்குமாருடன் பந்தலூருக்கு வந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை அஜித்குமார் கேரளாவுக்கு கடத்தி சென்று திருமணம் செய்ததும், எர்ணாகுளம் பகுதியில் 2 பேரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து தேவாலா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்தனர்.

சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்துவதற்கு உடந்தையாக இருந்ததாக அஜித்குமாரின் தாய் மற்றும் தங்கை மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story