நாகை பாரதிதாசன் கல்லூரி பகுதி நேர விரிவுரையாளர்கள் திடீர் தர்ணா வகுப்புகள் பாதிப்பு


நாகை பாரதிதாசன் கல்லூரி பகுதி நேர விரிவுரையாளர்கள் திடீர் தர்ணா வகுப்புகள் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 5:15 AM IST (Updated: 28 Feb 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

நாகை பாரதிதாசன் கல்லூரி பகுதிநேர விரிவுரையாளர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வகுப்புகள் பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு காலை மற்றும் மாலை பகுதி நேரங்களில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட பகுதிநேர விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு பகுதிநேர விரிவுரையாளர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பகுதிநேர விரிவுரையாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரத்தநாடு, லால்குடி, பெரம்பலூர், அறந்தாங்கி, நாகை, நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, இனாம்குளத்தூர், வேப்பூர் ஆகிய 10 இடங்களில் உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரத்தநாடு, லால்குடி, பெரம்பலூர், அறந்தாங்கி ஆகிய 4 இடங்களில் உள்ள உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியும் அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்படுவதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் பாதிப்பு

இதனால் பகுதிநேர விரிவுரையாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர்களை கல்லூரியில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். அதற்குமாறாக பகுதிநேர விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் கல்லூரியில் வகுப்புகள் பாதிக்கப்பட்டது.

Next Story