தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு


தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2020 5:30 AM IST (Updated: 28 Feb 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

நாகப்பட்டினம்,

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

ஒளியூட்டக்கூடியது

பெண்கள் கல்வி கற்கும் போது, அக்கல்வி அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது சந்ததிக்கே அறிவு ஒளியூட்டக்கூடியது. தமிழ்நாட்டில் கல்வியில் பெண்கள் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தினை உடையவராக இருந்து வந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்காக அறிய பல திட்டங்களை வகுத்து செயல்படுத்திய ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய குடிமக்களாகிய நாம், சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்திட வேண்டும்.

நமது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல், வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவதுடன், மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

குழந்தை திருமணம்

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு நம்மால் இயன்ற பங்களிப்பை அளித்திட வேண்டும். குழந்தை திருமணம் பற்றி தெரியவந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் பிரான்சிஸ், கல்லூரி முதல்வர் ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story