ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குப்பைகள் கொட்டிய கிராம மக்கள் - புதுப்பேட்டை அருகே பரபரப்பு


ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குப்பைகள் கொட்டிய கிராம மக்கள் - புதுப்பேட்டை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 10:30 PM GMT (Updated: 27 Feb 2020 7:27 PM GMT)

புதுப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் குப்பைகளை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் குப்பைகளை கொட்ட ஊராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை. குப்பைகளை சேகரிக்க தொழிலாளர்கள் யாரும் வருவதில்லை.

இதனால் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவ்வாறு தெருவில் போடப்படும் குப்பைகள், கழிவுநீர் கால்வாயில் விழுகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும், தெருக்களில் குப்பைகளை கொட்ட குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பல முறை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு, தெருக்களில் கிடந்த குப்பைகளை அள்ளி, ஊராட்சி மன்ற அலுவலக வாசலில் போட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், குப்பை தொட்டி வைக்காததால் குப்பைகளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொட்டியுள்ளோம். வரும் காலங்களில் குப்பை தொட்டி வைக்கா விட்டால், தொடர்ந்து இங்கேயே குப்பைகளை கொட்ட முடிவு செய்துள்ளோம் என்றனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா நேரில் வந்து, பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை அகற்றி னார். மேலும் அவர், தெருக்களில் குப்பை தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story