துணை ஜனாதிபதி இன்று மாமல்லபுரம் வருகை சமஸ்கிருத கலாசார மையத்தை தொடங்கி வைக்கிறார்


துணை ஜனாதிபதி இன்று மாமல்லபுரம் வருகை சமஸ்கிருத கலாசார மையத்தை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 28 Feb 2020 4:15 AM IST (Updated: 28 Feb 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்திற்கு இன்று வருகை தரும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சமஸ்கிருத கலாசார மையத்தை தொடங்கிவைக்கிறார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக அரசின் கலை, பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் அரசினர் சிற்ப கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மரபு கட்டிடக்கலை, கற்சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம், வண்ண ஓவியம் போன்ற படிப்புகள் 4 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த கல்லூரியில் சமஸ்கிருதம் ஒரு பயிற்று மொழியாக கற்பிக்கப்பட்டு வந்தது.

ஒரு சில மாணவர்களின் போராட்டம் காரணமாக 22 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருத பாடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த கல்லூரி தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து சமஸ்கிருத மொழி ஒரு பாடமாக இங்கு பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த கல்லூரிக்கு வருகை தரும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மாணவர்கள் வடித்த சிற்பங்களை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். சமஸ்கிருத கலாசார மையத்தை தொடங்கிவைக்கிறார்.

துணை ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கல்லூரி வளாகம் முழுவதும் இருந்த புதர்கள், முள்செடிகள் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் இருந்த அனைத்து வகுப்பறைகளும் புதுப்பொலியுடன் சீரமைக்கப்பட்டு ஆங்காங்கே அலங்கார வரவேற்பு, சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் அரசு சிற்ப கலைக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வந்து இருந்தனர்.

Next Story