‘போக்சோ’ வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தல்


‘போக்சோ’ வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2020 4:45 AM IST (Updated: 28 Feb 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

‘போக்சோ’ வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என போலீசாருக்கு நீதிபதி எழிலரசி அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்,

‘போக்சோ’ சட்ட வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நீதிபதி எழிலரசி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘போக்சோ’ சட்ட வழக்குகளை 1 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதனால் ‘போக்சோ’ சட்ட வழக்குகளுக்கு விரைவில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையின்போது தவறாமல் பாதிக்கப்பட்ட சிறுமிகளையும், சாட்சிகளையும் ஆஜர்படுத்த வேண்டும். சாட்சிகள் வரவில்லை என்றால் மற்றொரு தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் விசாரணை முடிய காலதாமதம் ஏற்படும்.

மருத்துவ சான்றிதழ்

எனவே வழக்குகள் விரைந்து முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கு விசாரணையில் ஒரே போலீசாரே ஆஜரானால் வழக்கு விவரங்கள் அனைத்தும் அவருக்கு தெரிந்து இருக்கும். புதிதாக வருபவருக்கு வழக்கு விவரம் முழுமையாக தெரியவில்லை. மருத்துவ சான்றிதழை விரைவாக பெற்று சமர்ப்பிக்க வேண்டும். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ‘போக்சோ’ சட்ட வழக்கை விரைந்து முடிக்க மாதம்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அரசு வக்கீல் மஞ்சுளா, டாக்டர் ராணி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், சீத்தாராமன், நந்தகுமார், அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story