ஆட்டுக்கிடை தகராறில் விவசாயி கொலை: சிவகங்கை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு, 16 பேருக்கு ஆயுள் தண்டனை - மதுரை சிறையில் அடைப்பு


ஆட்டுக்கிடை தகராறில் விவசாயி கொலை: சிவகங்கை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு, 16 பேருக்கு ஆயுள் தண்டனை - மதுரை சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 4:30 AM IST (Updated: 28 Feb 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர்களை அழைத்து வந்து தனது வயலில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தார்.

இதை அறிந்த அருகில் உள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த சந்திரகுமார் தனது வயலிலும் ஆட்டுக்கிடை அமைக்கும்படி கேட்டார். இதற்கு முனியாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 30.8.2010 அன்று முனியாண்டி தரப்பினர் சந்திரகுமார் ஆதரவாளர்களை ஆயுதங்களால் தாக்கினர். இதில் அல்லிமுத்து (வயது 55) என்ற விவசாயி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முனியாண்டி, அவருடைய மகன்கள் சேகர், பூசைமணி, பாண்டிவேல், வீரபத்திரன் மற்றும் அழகுபாண்டி, மற்றொரு முனியாண்டி, பழனியாண்டி, ராஜாங்கம், பிரபு, முத்துப்பாண்டி, மற்றொரு வீரபத்திரன், மைக்கேல், கணேசன், கருப்பையா, செல்வராஜ் மற்றும் ரதி, ராமாயி ஆகிய 18 பேரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது சேகர் மற்றும் கருப்பையா ஆகிய 2 பேர் இறந்துவிட்டனர். ரதி, ராமாயி ஆகிய பெண்கள் உள்பட 16 பேர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இ்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி 16 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். நீதிபதி கார்த்திகேயன் தீர்்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 2 பெண்கள் உள்பட 16 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற 16 பேரின் உறவினர்கள், குடும்பத்தினர் திரண்டு இருந்ததால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. தீர்ப்பை கேட்டதும் சிலர் அழுதனர்.

இதை தொடர்ந்து அதிரடி படை போலீசார் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். தீர்ப்புக்கு பின்னர் 16 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் ஏற்றினர்.

பின்னர் 16 பேரும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Next Story