பரமத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணிக்கான பூமிபூஜை அமைச்சர் தங்கமணி, ஐகோர்ட்டு நீதிபதி பங்கேற்பு


பரமத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணிக்கான பூமிபூஜை அமைச்சர் தங்கமணி, ஐகோர்ட்டு நீதிபதி பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி, ஐகோர்ட்டு நீதிபதி சுந்தர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்,

பரமத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். ஐகோர்ட்டு நீதிபதி தாரணி, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, தலைமை குற்றவியல் நீதிபதி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுந்தர் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்குள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு கல்வெட்டினையும் அவர் திறந்து வைத்தார். இதையடுத்து அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-

மருத்துவ கல்லூரி

குமாரபாளையம், சேந்தமங்கலம் பகுதிகளில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சேந்தமங்கலம் பகுதியை பொருத்தவரையில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதி என்பதால் அவர்களின் நலன்கருதி சேந்தமங்கலத்தில் தனி நீதிமன்றம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.10 கோடியே 93 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதேபோல தற்போது நாமக்கல் மாவட்டத்திற்கு என தனியாக மருத்துவ கல்லூரி அமைக்க வருகிற 5-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தார். ஆணையத்திற்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமோ அவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டு அறிக்கை வழங்குவார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அரசை பற்றி குறை கூறுவதற்கு எந்த காரணமும் இல்லாததால் ஏதாவது ஒரு காரணத்தை எடுத்துக் கொண்டு தேவையில்லாமல் ஆணையம் பற்றி அரசியலுக்காக பேசி கொண்டிருக்கிறார்.

வேளாண் மண்டலம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். மாநில அரசுக்கே வேளாண் மண்டலம் அமைக்க அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், அரசு வக்கீல்கள் தனசேகரன், சந்திரசேகரன், பரமத்தி வக்கீல்கள் சங்கத்தலைவர் சரவணகுமார் உள்பட வக்கீல்கள், அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் லதா நன்றி கூறினார்.

Next Story