பலாத்காரம் செய்ய முயன்றதால் தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற பிளஸ்-1 மாணவி


பலாத்காரம் செய்ய முயன்றதால் தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற பிளஸ்-1 மாணவி
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 28 Feb 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு பிளஸ்-1 மாணவி கொலை செய்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேச்சேரி,

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் 40 வயதுடைய கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் 16 வயது மூத்த மகள், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். 14 வயது மகள் 9-ம் வகுப்பும், 9 வயது மகன் 4-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கரும்பு வெட்டும் தொழிலாளியிடம் இருந்து அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். அவர் தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு அவர் விசைத்தறி ஓட்டி தனது குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்.

சேர்ந்து வாழ முடிவு

இதனிடையே குழந்தைகள் பெரியவர்களாக ஆகி வருவதால், இனிமேல் கரும்பு வெட்டும் தொழிலாளி குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தால் தான் நன்றாக இருக்கும் என்று கருதிய மாமனார் மற்றும் உறவினர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து மகளுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுள்ளனர்.

மேலும் மகள் விசைத்தறி ஓட்டி பிழைப்பு நடத்தி வருவதால் நீங்கள் அங்கு வந்து சேர்ந்து இருங்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது மாமனாரின் ஊருக்கு வந்த கரும்பு வெட்டும் தொழிலாளி மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனிடையே மீண்டும் அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியை அடிக்கடி தாக்கி உள்ளார்.

பலாத்கார முயற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கரும்பு வெட்டும் தொழிலாளி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர், ஒரு கட்டத்தில் மனைவியை அடித்து ஒரு அறையில் பூட்டி விட்டு, மற்றொரு அறையில் இருந்த தனது மூத்த மகளான பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் மீண்டும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் தன்னை தற்காத்து கொள்ள அந்த மாணவி அங்கு கிடந்த அம்மிக்கல்லை தூக்கி தந்தையின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த தொழிலாளி இறந்தார்.

இதனிடையே பதற்றத்தில் இருந்த மாணவி, வீட்டில் பூட்டியிருந்த அறையை திறந்து தனது தாயாரை மீட்டு நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிணத்துடன் விடிய, விடிய அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். இதனிடையே காலையில் இந்த சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியது.

போலீசார் விசாரணை

இந்த தகவல் கிடைத்ததும், ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து கொலையுண்ட தொழிலாளியின் மனைவி, மகள்கள், மகன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே குடும்பத் தகராறு விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக இந்த கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story