பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் தூண்டில் வளைவு பணியை விரைவாக முடிக்க கோரிக்கை


பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் தூண்டில் வளைவு பணியை விரைவாக முடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 28 Feb 2020 4:30 AM IST (Updated: 28 Feb 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஈத்தாமொழி அருகே பொழிக்கரை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைவாக முடிக்க கோரி பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈத்தாமொழி,

ஈத்தாமொழி அருகே பொழிக்கரை மீனவ கிராமம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி கடல்நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தன. இதையடுத்து கடல் அரிப்பை தடுக்க அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது. அதனால் மீண்டும் கடல் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

பஸ் சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தூண்டில் வளைவு பணிகளை உடனடியாக தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும் என கோரி அப்பகுதியாக வந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின்னர் போலீசார் தூண்டில் வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காண்டிராக்டரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அவர் உடனே பணிகளை தொடங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story