போராட்டம், உழைப்பு மூலம் முதல்-மந்திரி பதவிக்கு வந்தவர் எடியூரப்பா சித்தராமையா புகழாரம்
போராட்டம், உழைப்பு மூலம் முதல்-மந்திரி பதவிக்கு வந்தவர் என எடியூரப்பாவுக்கு சித்தராமையா புகழாரம் சூட்டினார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா பிறந்த நாள் விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-
அரசியல் வேறு, மனித உறவு வேறு. அரசியலில் பிரச்சினைகள் இருந்தாலும், அது எக்காரணம் கொண்டும் மனித உறவுகளில் பிளவை ஏற்படுத்தக்கூடாது. பா.ஜனதாவின் தத்துவங்கள் வேறு, நான் இருக்கும் காங்கிரசின் சித்தாந்தங்கள் வேறு. ஆனால் அது அரசியலுக்கு மட்டுமே சேர்ந்தது. அரசியல் பிரச்சினைகள் மனித உறவுகளில் குறுக்கே வரக்கூடாது என்பது எனது கருத்து.
சட்டசபைக்கு வந்தோம்
எடியூரப்பா இன்னும் 100 ஆண்டுகளை தாண்டி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். ஒரு முறை மகாத்மா காந்திக்கு ஒருவர் கடிதம் எழுதினார். அவர், நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த காந்தி, நான் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். நான் 125 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் அவர் அவ்வளவு காலம் வாழ முடியவில்லை.
நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. வாழும் காலத்தில் எவ்வளவு ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக வாழ்கிறோம் என்பது தான் மிக முக்கியம். 1983-ம் ஆண்டு நானும், எடியூரப்பாவும் ஒரே நேரத்தில் சட்டசபைக்கு வந்தோம். அவர் எனக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 5 ஆண்டுகளுக்கு பிறகு நான் முதல்-மந்திரியானேன்.
முதல்-மந்திரி பதவி
எடியூரப்பா நேரடியாக முதல்-மந்திரி பதவிக்கு வந்துவிடவில்லை. அவர் மண்டியாவில் உள்ள பூகனகெரே என்ற கிராமத்தில் பிறந்து, அங்கு படித்து சிகாரிபுராவுக்கு வந்தார். அங்கு போராட்டங்கள் மூலம் வளர்ந்து பல்வேறு பதவிக்கு வந்தார். போராட்டம், உழைப்பு மூலம் முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளார். போராட்டங்கள் மூலம் உயர்ந்த பதவிக்கு வந்தவர்களுக்கு மட்டுமே, மக்களின் கஷ்டங்கள் என்ன என்பது நன்கு தெரியும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story