வரலாறுகள் மறைக்கப்படுகின்றன தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை


வரலாறுகள் மறைக்கப்படுகின்றன தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
x
தினத்தந்தி 27 Feb 2020 11:51 PM GMT (Updated: 27 Feb 2020 11:51 PM GMT)

வரலாறுகள் மறைக்கப் படுகின்றன என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.

புதுச்சேரி,

தேச பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அமைப்பு மற்றும் புதுவை பல்கலைக்கழகம் சார்பில் சகோதரத்துவத்துக்கான 3 நாள் கருத்தரங்கு புதுவையில் தொடங்கியது. இதன் தொடக்கவிழா தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்தரங்கை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தவறாக சித்தரிப்பு

இ்ந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பழங்காலந்தொட்டே வர்த்தகம், கலாசாரம் குறித்து தொடர்புகள் இருந்துள்ளது.

ஆனால் வரலாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதை மீட்டு உருவாக்கம் செய்வது அவசியமானது. தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் பெருமை பரவியுள்ளது. அதனால்தான் தற்போதைய அரசு மராட்டிய துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டியுள்ளது.

தமிழகத்தில் எதிர்ப்பு பிரசாரமே அதிகமாக உள்ளது. சில சக்திகள் நமது வரலாற்றை மறைத்து உள்ளன. அதை மீட்டு உருவாக்க வேண்டும்.

தமிழகத்தின் மகளாகிய நான் தெலுங்கானாவின் கவர்னராக உள்ளேன். இதற்காக பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

கவர்னர் கிரண்பெடி

புதுவை கவர்னர் கிரண்பெடி பேசும்போது, பழங்காலத்தில் புதுச்சேரியில் இருந்த சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும், கடல் வணிகத்துக்கு சான்றாக விளங்கிய அரிக்கன்மேட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாகவும், ஆன்மிக சுற்றுலாவுக்கு புதுவையில் முக்கியத்துவம் அளிக்கப் படுவதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஆர்.என்.சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story