பெரம்பலூர் போலீஸ் நிலையத்தை காணவந்த பள்ளி குழந்தைகள்
பெரம்பலூர் போலீஸ் நிலையத்தினை காணவந்த பள்ளி குழந்தைகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீசார் வரவேற்றனர்.
பெரம்பலூர்,
திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரிலும், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் அறிவுறுத்தலின் பேரிலும் பெரம்பலூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு காவலன் செயலி செல்போனில் எவ்வாறு பயன்படுத்துவதும் குறித்தும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி, அதனை வைரலாக்கி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விபத்தில் உதவியவர்களுக்கு பாராட்டும் விதமாக, அவர்களின் புகைப்படத்தினை முக்கிய பகுதிகளில் பதாகைகளாக வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு போலீசாரின் மீது உள்ள அச்சத்தை தீர்க்க புதிய முயற்சியாக நேற்று பள்ளியில் பயிலும் குழந்தைகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பார்வையிட செய்தனர்.
முன்னதாக பள்ளி குழந்தைகளுக்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் அக்குழந்தைகளுக்கு போலீஸ் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் தகவல் பரிமாற்றம் குறித்தும், போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா எடுத்துரைத்தார்.
பள்ளி குழந்தைகளும் தங்களது சந்தேகங்களை போலீசாரிடம் தயக்கமின்றி கேட்டு தெளிவு பெற்றனர். பின்னர் அந்த குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து போலீசார் இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.