உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு


உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-28T20:43:53+05:30)

கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் போராட் டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், 

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 60). வாகன உதிரிபாகங்களை விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த 4 ஆண்டுகளாக உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக வீட்டிலிருந்தார். இவரது மனைவி மஞ்சுளா (54). இவர், கரூர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர்களுடைய மகள் சுரபி (21) புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் மருத்துவப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மகளின் படிப்பு செலவுக்காக பணம் தேவைப்பட்டதால், தனது கணவர் பெயரில் ஏமூரில் உள்ள காலியிடத்தை தன் பெயருக்கு மாற்றி விற்பனை செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி பத்திரப்பதிவு மேற்கொள்ள நேற்று கரூர் அரசு மருத்துவமனை அருகேயுள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ராஜாராமை ஆம்புலன்சில் வைத்து கொண்டு உறவினர்களுடன் மஞ்சுளா வந்தார். பின்னர் படுக்கையில் இருந்தவாறே அவரை தூக்கி கொண்டு விசாரணைக்காக சார்பதிவாளர் அலுவலக அதிகாரி முன்பு கொண்டு சென்றனர்.

அப்போது தான் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாத நிலையில் ராஜாராம் இருக்கிறார். எனவே இதனை பதிவு செய்ய முடியாது என அதிகாரி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் படுத்த படுக்கையாக இருந்த ராஜாராமை, அந்த அலுவலகம் முன்பு வைத்து மஞ்சுளா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது நிருபர்களிடம் மஞ்சுளா கூறுகையில், எனது கணவர் சுயநினைவுடன் உள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்கோளாறால் வாய் பேசமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும் சைகை மூலம் உரிய முறையில் பதிலளிப்பார். எனினும் பதிவினை மேற்கொள்ள அதிகாரி மறுத்தது ஏன்? என தெரியவில்லை.

எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பதிவு தொடர்பான மாற்று வழியினை கூற வேண்டும் என்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இது தொடர்பாக கரூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.

Next Story