பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மகளுக்கு அரசு வேலை
பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மகளுக்கு அரசு வேலைக்கான ஆணையை தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் வழங்கினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேஉள்ள பருத்திவிளையைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 57). களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்தமாதம் (ஜனவரி)8-ந் தேதி இரவு களியக்காவிளை சந்தைரோடு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது பயங்கரவாதிகளால்சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவருக்கு ஏஞ்சல் மேரி என்ற மனைவியும், ஆன்றீஸ் ரினிஜா (27), வினிதா (26) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் வினிதா மனநலம் பாதிக்கப்பட்டவர். ஆன்றீஸ் ரினிஜாவுக்கு திருமணமாகி ஜெர்சிமா (2) என்ற மகள் இருக்கிறாள்.
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை இழந்து தவித்த அவருடைய குடும்பத்தினரை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவியும் வழங்கப்பட்டது. வில்சனின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்து இருந்தார்.
அதன்படி வில்சனின் மூத்த மகளான ஆன்றீஸ் ரினிஜாவுக்கு கருணை அடிப்படையில் குமரி மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. அதற்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் பணி நியமன ஆணையை ஆன்றீஸ் ரினிஜாவிடம் வழங்கினர்.
அப்போது ஆன்றீஸ் ரினிஜாவும், அவருடைய கணவர் ஜெர்வினும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தளவாய் சுந்தரம் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தளவாய் சுந்தரத்திடம், முதல்-அமைச்சரை மீண்டும் ஒருமுறை சந்தித்து நன்றி தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு தளவாய்சுந்தரம், நிச்சயமாக ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ஷரண்யா அரி, மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story