குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து குன்னூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினர் கைது
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து குன்னூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர்,
தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குன்னூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
ரெயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து ஆயுதம் தாங்கிய ரெயில்வே பாதுகாப்பு படையினர், நக்சல் தடுப்பு சிறப்பு போலீசார், ரெயில்வே போலீசார், குன்னூர், மேல் குன்னூர், வெலிங்டன் அருவங்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த போலீசார் குன்னூர் ரெயில் நிலையத்திலும், குன்னூர் லெவல் கிராஸிங்கிலும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ரெயில் மறியலில் ஈடுபட மனிதநேய மக்கள் கட்சியின் குன்னூர் நகர செயலாளர் கமுருதீன் தலைமையில் லெவல் கிராஸிங் பகுதிக்கு வந்தனர். இதையறிந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் லெவல் கிராஸிங் பகுதியில் உள்ள இரு ரெயில்வே கேட்டையும் மூடினர். ரெயில் மறியலில் ஈடுபட வந்த மனித நேய மக்கள் கட்சியினரை லெவல் கிராஸிங் பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் மனிதநேய மக்கள் கட்சியினர் தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றதாக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், குன்னூர் நகரத் தலைவர் ரசூல் உள்பட 121 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story