நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படுவதை தவிர்க்க 5 முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1¼ கோடி நிதி - முதன்மை செயலாளர் தகவல்
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படுவதை தவிர்க்க 5 முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு மாநில இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் சார்பில், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் யுக்திகள் மற்றும் சரிவு மேலாண்மை குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு ஊட்டியில் நேற்று தொடங்கியது. தமிழக அரசின் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளரும், வருவாய் ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கருத்தரங்கை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரியில் மழை அதிகமாக பெய்யும் போது நிலச்சரிவு, மண்சரிவு, சாலைகள் துண்டிப்பு போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன. இங்கு மட்டுமல்லாமல் தேனி, கொடைக்கானல், நெல்லையில் ஒரு பகுதி ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. மேகங்கள் ஒன்றுக்கு ஒன்று மோதுவதால் (க்ளவுடு பஸ்ட்) ஒரே இடத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது. சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் மேடுகளை பாதுகாக்க வேண்டும்.
நிலச்சரிவான பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவது, சரியான நீர்வழித்தடங்கள் அமைக்காதது என மனிதர்கள் செய்யும் தவறுகளால் பேரிடர்கள் ஏற்படுகிறது. இயற்கை வளங்களை அழிப்பதும் பேரிடருக்கு காரணமாக உள்ளது. இந்தியாவில் இமாச்சலபிரதேசம், மேகலாயா, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர்கள் அதிகளவில் ஏற்படுகிறது. நாட்டில் 15 சதவீத பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. பேரிடர் ஏற்பட்டதும் அரசு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபடுகிறது. ஆனால், பேரிடர் ஏற்படுவதை முன்கூட்டியே கண்காணிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அவசியம்.
நான் கோவையில் இருந்து கருத்தரங்கிற்கு வரும் போது, காட்டேரியில் திடீரென வாகனத்தில் பழுது ஏற்பட்டு பின்னோக்கி சென்றது. அப்போது அந்த வழியாக வந்த மக்கள் வாகனம் பின்னோக்கி நகர்ந்து செல்லாமல் தடுத்து ஓரமாக நிறுத்தினர். அதன் பின்னர் வேறு வாகனத்தில் வந்தேன். இதுபோன்று தான் உள்ளூர் மக்கள், அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நீலகிரியில் பேரிடர் ஏற்படுவதை தவிர்க்க தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும் 5 முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கப்படும். சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் மேடுகளை பாதுகாக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1978, 2001, 2006, 2009, 2019-ம் ஆண்டுகளில் கனமழையால் பேரிடர்கள் நிகழ்ந்தன. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். கிராம பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு பேரிடர் மேலாண்மை திட்டம் உருவாக்க வேண்டும். பேரிடர் ஏற்படுவதற்கு முன்னதாக மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரும் வகையில் செயல்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 492 இடங்கள் பேரிடர் பாதிக்கக்கூடும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு சாலை அமைத்தல், குடிநீர் குழாய் பொருத்துதல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய கருத்தரங்கு மூலம் ஆராய்ச்சியாளர்கள் மக்களை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும். மலை மாவட்டமான நீலகிரியில் கலெக்டர், திட்ட இயக்குனர், வருவாய் அலுவலர் போன்றோர் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உள்ள மற்ற அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும். சுற்றுலா தலங்கள் அல்லாமல் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் கிராமப்பகுதி சுற்றுலா ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால் 77 இடங்களில் நிலச்சரிவுகள், 20 இடங்களில் சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட்டது. 7-ந் தேதி 820 மில்லி மீட்டர், 9-ந் தேதி 911 மில்லி மீட்டர் மழை சராசரியாக பதிவானது. வெள்ளத்தால் 5 பேரும், இடிபாடுகளில் சிக்கி 2 பேரும் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படக்கூடியதாக 283 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிப்பில் இருந்து மீள சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கிய அரசுக்கும், வருவாய்த்துறை முதன்மை செயலாளருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதனைதொடர்ந்து கருத்தரங்கு தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது. நீலகிரியில் மழையால் ஏற்படும் பேரிடரை தெரிவிக்கவும், நிலச்சரிவு இடங்களை தெரிந்துகொள்ளவும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இந்திய புவியியல் அளவீடு துறை துணை இயக்குனர் அமித்தவா குண்டு, டேராடூன் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஓஸ்வி மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். முன்னதாக முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் வரவேற்றார். முடிவில் மைய தலைவர் கண்ணன் நன்றி கூறினார். கருத்தரங்கு இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது.
Related Tags :
Next Story