விழுப்புரத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 29 Feb 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் வழுதரெட்டி கணே‌‌ஷ் நகரில் வசித்து வருபவர் பக்தவச்சலம் (வயது 60). விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறையில் வாகன டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் தற்போது விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் புதியதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதனால் கணே‌‌ஷ் நகரில் உள்ள வீட்டில் இருக்கும் பொருட்களை புதிய வீட்டிற்கு கொண்டு செல்லும் பணிகளில் சில நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கணே‌‌ஷ் நகரில் உள்ள வீட்டில் இன்னும் சில பொருட்கள் உள்ளதால் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டை பூட்டிவிட்டு பக்தவச்சலம் தனது குடும்பத்தினருடன், கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள புதிய வீட்டில் படுத்து தூங்கினார்.

நேற்று காலை கணே‌‌ஷ் நகரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 50 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story