கெங்கவல்லி அருகே கடம்பூரில் இன்று ஜல்லிக்கட்டு


கெங்கவல்லி அருகே கடம்பூரில் இன்று ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 29 Feb 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது.

சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூரில் இன்று (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கான பணிகளை ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவினர் செய்து வருகின்றனர்.

இதையொட்டி கலெக்டர் ராமன் கடம்பூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். தடுப்பு வேலிகள் அமைத்தல், பார்வையாளர்கள் அமருவதற்கான வசதி, காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறையினர் செய்து கொடுக்க வேண்டும். மேலும், சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் டாக்டர்கள், 108 ஆம்புலன்ஸ் வசதி ஆகிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்பினர் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதித்து அதற்கு தகுதிச்சான்று அளிக்க வேண்டும். மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும் பட்சத்தில் கூர் பகுதிகளுக்கு மரக்கவசம் பொருத்த வேண்டும். இல்லையெனில் கால்நடை டாக்டர் கொம்புகளின் கூர் மங்கச்செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலுக்கு வருவதற்கு முன்பு 20 நிமிடம் ஓய்வு எடுத்திருக்க வேண்டும். மாடுகளுக்குத் தேவையான தண்ணீர், தீவனம் செய்து கொடுக்க வேண்டும். காளைகளுக்கு உடலில் எந்த இடத்திலும் காயம் இருக்கக் கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மக்கள் உட்காரும் இடத்தில் தாவி குதித்து வராத வண்ணம் குறைந்த பட்சம் 8 அடி உயரம் தடுப்பு கட்டை அமைக்க வேண்டும். எனவே கோர்ட்டு உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர், உதவி கலெக்டர் துரை, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் புருஷோத்தமன், கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து, கடம்பூர் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் லோகநாதன், துணைத்தலைவர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story