குண்டடம் வாரச்சந்தையில் பச்சைமிளகாய் வரத்து அதிகரிப்பு விலைவீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


குண்டடம் வாரச்சந்தையில் பச்சைமிளகாய் வரத்து அதிகரிப்பு விலைவீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 28 Feb 2020 11:15 PM GMT (Updated: 28 Feb 2020 8:50 PM GMT)

குண்டடம் வாரச்சந்தையில் பச்சை மிளகாய் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து குங்குமபாளையத்தை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது:-

குண்டடம், 

குண்டடம் சுற்றுவட்டாரம் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் ருத்ராவதி, சூரியநல்லூர், முத்தனம்பட்டி உட்பட பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் குறைந்த தண்ணீரை கொண்டு நிறைந்த லாபம் தரும் பயிர்களான வெங்காயம், கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களை பயிர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சில நாட்களாக பெய்த பருவமழை மற்றும் வரும் பி.ஏ.பி.பாசனத்தின் மூலம் தண்ணீர் நல்ல முறையில் கிடைத்துள்ளதால் இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் மிளகாய் செடி ரகங்களான கருங்காய், உருண்டை, சம்பா போன்ற வற்றை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

மிளகாய் செடி 1 ஏக்கர் சாகுபடி செய்ய விதை, நடவுகூலி, உரம் உள்ளிட்டவை என ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம்.5 மாதம் வரை காய் பிடிக்கும். நல்ல மகசூல் கிடைத்தால் ஏக்கருக்கு 5 மாதங்களுக்கு 10 டன் வரை உற்பத்தி கிடைக்கும். 30 நாட்களில் காய் பிடிக்கத்தொடங்கும்.

காய்பிடித்த நாளிலிருந்து 12 நாட்களுக்கு ஒரு முறை காய்களை ஆட்கள் மூலம் கூலி கொடுத்து பறித்து குண்டடம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் போது வாடகை சுங்கம் என 1 கிலோவுக்கு ரூ.10 செலவு ஆகிறது.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை கூடும். இந்த சந்தைக்கு பச்சை மிளகாயை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அதேபோல் பச்சை மிளகாயை வாங்குவதற்காக கேரளா, ஊட்டி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் குண்டடம் வாரச்சந்தையில் விற்பனைக்காக அதிகளவில் பச்சை மிளகாயை கொண்டு வந்ததால் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. 1 கிலோ மிளகாய் 6 ரூபாய்க்கு விற்பனையானதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கவலை அடைந்துள்ளனர்.

உரம், ஆட்களின் கூலி மற்றும் இடுபொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு நியாயமான விலை இல்லாததால் நஷ்டம் அடைந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story