திருச்செங்கோடு அருகே கல்லூரி மாணவர் மர்மசாவு கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்தார்


திருச்செங்கோடு அருகே கல்லூரி மாணவர் மர்மசாவு கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்தார்
x
தினத்தந்தி 29 Feb 2020 4:15 AM IST (Updated: 29 Feb 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே கல்குவாரி குட்டையில் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார்.

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு வையப்பமலை அருகே உள்ள மரப்பரை குடித்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் விக்னே‌‌ஷ்வரன் (வயது 22). இவர் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு ஹெல்த் இன்ஸ்பெக்டர் துறையில் படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி கல்லூரிக்கு சென்று விட்டு, மாலையில் மாணவர் வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் மாணவர் விக்னே‌‌ஷ்வரன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று மதியம் 12 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரை விவசாய நிலத்திற்கு விடுவதற்காக சுப்ரமணி என்பவர் வந்தார். அப்போது தண்ணீரில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ராஜேந்திரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அங்கு சென்று பிணமாக மிதந்தது தங்கள் மகன் விக்னே‌‌ஷ்வரன் என்பதை உறுதிசெய்தனர். மேலும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி குட்டையில் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story