சேலம் அருகே பெண் துப்புரவு பணியாளர் கொலை: கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்


சேலம் அருகே பெண் துப்புரவு பணியாளர் கொலை: கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 28 Feb 2020 11:00 PM GMT (Updated: 28 Feb 2020 9:29 PM GMT)

சேலம் அருகே பெண் துப்புரவு பணியாளர் கொலை வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை தப்பக்குட்டை பகுதியை சேர்ந்த டிரைவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அந்த பெண் கேரளாவை சேர்ந்தவர். டிரைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.

இதனால் அந்த பெண் தனது மகள்களுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார். கணவர் இறந்த பின்னர் அந்த பெண் இளம்பிள்ளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு சீரகாபாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்தார்.

இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி அந்த பெண் மருத்துவமனைக்கு துப்புரவு பணிக்காக சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை அருகில் உள்ள ஒட்டன்காடு நீர்குட்டை பகுதியில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதை அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொ) சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

31 வயதான அந்த பெண் இளம்பிள்ளை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலைபார்த்தபோது அந்த மருத்துவமனையில் அவருடன் மாட்டையாம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணும் துப்புரவு பணியாளராக பணியாற்றினார். அந்த பெண்ணை அழைத்து செல்வதற்காக அவருடைய மகன் விசைத்தறி தொழிலாளி பார்த்தீபன் (20) அடிக்கடி மருத்துவமனைக்கு வருவார். அப்போது தப்பக்குட்டையை சேர்ந்த பெண்ணுக்கும், பார்த்தீபனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி இரவு பார்த்தீபன் தனது மோட்டார்சைக்கிளில் தப்பக்குட்டையை சேர்ந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு வந்தார்.

ஒட்டன் காடு பகுதியில் வந்தபோது அந்த பெண்ணுக்கும், பார்த்தீபனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு பார்த்தீபன் பணம் கொடுத்து இருந்தார். இதை அவர் திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்தீபன் அந்த பெண்ணை பிடித்து கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்த அந்த பெண் தலை தரையில் கிடந்த கல் மீது மோதியது. இதில் அவர் மயக்கம் அடைந்தார். இதன்பின்னர் பார்த்தீபன் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் மயக்கம் அடைந்த அந்த பெண் அதே இடத்தில் கிடந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் விசைத்தறி தொழிலாளிகள் பழனிசாமி (29), ரவி என்ற தர்மலிங்கம் (35) ஆகியோர் வந்தனர். ரோட்டோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவர்கள் இயற்கை உபாதைக்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு பெண் மயங்கி கிடந்ததை பழனிசாமியும், ரவியும் பார்த்தனர்.

பின்னர் அருகில் சென்ற 2 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். அந்த பெண்ணின் கள்ளக்காதலன் பார்த்தீபன் மற்றும் பழனிசாமி, ரவி என்ற தர்மலிங்கம் ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெக்டர் சசிகுமார் கைது செய்தார். பார்த்தீபன் மாட்டையாம்பட்டியிலும், பழனிசாமி அய்யனூர் தெப்பக்குட்டையிலும், ரவி பூசாரி காட்டுவளவிலும் வசித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், பார்த்தீபன் கீழே தள்ளியதில் அந்த பெண்ணின் தலை கல்லில் மோதியதில் இறந்தாரா?, அல்லது பழனிசாமி, ரவி ஆகியோர் மயங்கி கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தபோது இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் கொலை வழக்கில் 3 பேர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story