உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது வரலாற்று ஆய்வாளர் எஸ்.ஷெட்டர் மரணம் சித்தராமையா இரங்கல்


உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது வரலாற்று ஆய்வாளர் எஸ்.ஷெட்டர் மரணம் சித்தராமையா இரங்கல்
x
தினத்தந்தி 29 Feb 2020 5:04 AM IST (Updated: 29 Feb 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலக்குறைவால் பிரபல வரலாற்று ஆய்வாளர் எஸ்.ஷெட்டர் ேநற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்தவர் சடாக்‌ஷரி ஷெட்டர் என்கிற எஸ்.ஷெட்டர் (வயது 85). இவர் பிரபல வரலாற்று ஆய்வாளர் ஆவார்.

பெங்களூருவில் வசித்து வந்த இவர் ரத்த குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதைதொடர்ந்து 10 நாட்களுக்கு முன்பு அவர் பெங்களூரு பன்னரகட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.

வரலாற்று ஆய்வாளர்

மரணமடைந்த எஸ்.ஷெட்டர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மைசூரு, தார்வாரில் முடித்தார். பின்னர் அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பை முடித்தார்.

இந்திய வரலாற்றின் அதிகார மையமாக திகழ்ந்த அவர் 1970-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றி உள்ளார். தார்வாரில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்தின் இந்திய கலை வரலாற்று நிறுவனத்தின் இயக்குனராக 1978-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

சித்தராமையா இரங்கல்

டெல்லியில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக 1996-1999-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பணியாற்றியுள்ளார். சிறந்த வரலாற்று ஆய்வாளராக திகழ்ந்த எஸ்.ஷெட்டர் மறைவுக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எஸ்.ஷெட்டர் மறைவால் இந்திய கல்வி உலகம் ஏழ்மையாகிவிட்டது. அவர் நம்மை வழிநடத்த இன்னும் கொஞ்ச காலம் நம்முடன் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொல்பொருள் ஆய்வின் பெங்களூரு பிரிவு அலுவலகத்தில் அங்கு பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள், ஷெட்டரின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

Next Story