நீதிபதி இடமாற்றம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் கர்நாடக காங்கிரஸ் குற்றச்சாட்டு


நீதிபதி இடமாற்றம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்   டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே காரணம்   கர்நாடக காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Feb 2020 5:16 AM IST (Updated: 29 Feb 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி கலவரத்திற்கு மத்திய பா.ஜனதா அரசே நேரடி காரணம் என்றும், டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி இடமாற்றம் என்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கர்நாடக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வீடுகளை இழந்துவிட்டனர்

டெல்லியில் பா.ஜனதா தலைவர்கள் மதக்கலவரங்களை தூண்டிவிடும் வகையில் கருத்துகளை வெளியிட்டனர். இந்த கருத்துகளில் வன்முறை வெடித்தது. இதனால் மதக்கலவரம் உண்டானது. இந்த வன்முறைக்கு மத்திய பா.ஜனதா அரசே நேரடி காரணம். மக்களின் சமாதி மீது ஆட்சி நடத்த பா.ஜனதா சதி செய்கிறது. டெல்லியில் சட்டம்-ஒழுங்கு உள்துறை மந்திரி அமித்ஷாவின் கீழ் வருகிறது. இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஜனாதிபதி அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

வன்முறையில் ஈடுபட்ட விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வன்முறை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதியை இரவோடு இரவாக பணி இடமாற்றம் செய்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். நாட்டில் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகம் நெருக்கடியில் சிக்கியுள்ளன. டெல்லி வன்முறையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்துவிட்டனர்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது. முன்பு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து, நாடு அபாயத்தில் உள்ளதாக கூறினர். அந்த நிலை இன்னும் நீடித்து வருகிறது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமிக்கு எதிராக கூறிய கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சட்டசபை நடைபெற அனுமதிக்க மாட்டோம்.

அரிசியைகுறைக்க கூடாது

கர்நாடக அரசு திவாலாகிவிட்டது. அரசு ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கிடைப்பது இல்லை. ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்கு ஒருவருக்கு 7 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதையும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது சரியல்ல. எக்காரணம் கொண்டும் அரிசியை குறைக்கக்கூடாது.

இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

Next Story