பெண் கவுன்சிலர் புகாரின் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா மீது கற்பழிப்பு வழக்கு பா.ஜனதாவில் இருந்து சமீபத்தில் விலகியவர்


பெண் கவுன்சிலர் புகாரின் பேரில்   முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா மீது கற்பழிப்பு வழக்கு   பா.ஜனதாவில் இருந்து சமீபத்தில் விலகியவர்
x
தினத்தந்தி 29 Feb 2020 12:11 AM GMT (Updated: 29 Feb 2020 12:11 AM GMT)

மிரா பயந்தர் முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவர் சமீபத்தில் தான் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.

மும்பை, 

மிரா பயந்தர் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா கட்சி மட்டுமின்றி, ஒட்டு மொத்தமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்தநிலையில் மிரா பயந்தர் மாநகராட்சி பா.ஜனதா பெண் கவுன்சிலர் ஒருவர், நரேந்திர மேத்தா மீது பரபரப்பு புகாரை முகநூலில் கூறியிருந்தார். அவர் நரேந்திர மேத்தா பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில் 44 வயதான அந்த பெண் கவுன்சிலர், நரேந்திர மேத்தா மீது கொங்கன் மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

அடித்து துன்புறுத்தினார்

கடந்த 1999-ம் ஆண்டு நரேந்திர மேத்தாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. 2001-ம் ஆண்டு அவர், என்னை தகானுவில் உள்ள கோவிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதுகுறித்து வெளியே சொல்ல கூடாது என என்னிடம் கூறினார்.

இந்தநிலையில் 2003-ம் ஆண்டு நரேந்திர மேத்தா வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகும் அவர் என்னுடன் பாலியல் தொடர்பில் இருந்தார். அவர் மூலம் எனக்கு தற்போது 16 வயதில் மகன் உள்ளான். நரேந்திர மேத்தா என்னை பலமுறை அடித்து துன்புறுத்தி உள்ளார். சாதி ரீதியாகவும் இழிவாகவும் திட்டி உள்ளார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

இந்த புகார் குறித்து மிரா ரோடு போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா மீது கற்பழிப்பு, மோசடி, வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல பெண் கவுன்சிலர் அளித்த புகாரின் பேரில் நரேந்திர மேத்தாவின் உதவியாளர் சஞ்சய் தக்கர் தர்கர் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story