மராட்டியத்தில் கல்வி நிறுவனங்களில் சேர முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு மந்திரி நவாப் மாலிக் அறிவிப்பு
மராட்டியத்தில் கல்வியில் முஸ்லிம் களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மேல்-சபையில் மந்திரி நவாப் மாலிக் அறிவித்தார்.
மும்பை,
மராட்டிய சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
கல்வியில் இடஒதுக்கீடு
இந்த கூட்டத்தொடரில் கிராம பஞ்சாயத்து தலைவர்களை மறைமுக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கவும், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கவும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், மராட்டியத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு முடிவு செய்து உள்ளது.
விரைவில் சட்டம்
இதை நேற்று மேல்-சபையில் சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி நவாப் மாலிக் (தேசியவாத காங்கிரஸ்) அறிவித்தார். இது தொடர்பான சட்டம் விரைவில் நிறைவேற்றப் படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று அவர் கூறினார். பள்ளிகளில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் சரத் ரான்பைஸ் எழுப்பிய கேள்விக்கு மந்திரி நவாப் மாலிக் இந்த பதிலை தெரிவித்தார்.
பின்னணி என்ன?
மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க அனுமதி மறுத்தது. ஆனால் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை சுட்டிக்காட்டி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கைவிரித்து விட்டது.
தற்போது மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story