மதுரையில், உலக தமிழ் சங்கங்களின் மாநாடு அமைச்சர் பாண்டியராஜன் தகவல்


மதுரையில், உலக தமிழ் சங்கங்களின் மாநாடு அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
x
தினத்தந்தி 1 March 2020 4:15 AM IST (Updated: 29 Feb 2020 11:24 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் உலக தமிழ் சங்கங்களின் மாநாடு இந்த மாத இறுதியில் நடக்கிறது என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

மதுரை,

அயலக தமிழ் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பன்முக நோக்கில் அயலக தமிழ் படைப்புகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் சிறந்த அயலக படைப்புகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு மொழி அழியாமல் இருக்க வேண்டுமெனில் புதிய புதிய சொற்கள் கண்டறியப்படுவது அவசியம்.

அதற்கான பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை செய்து வருகிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ரூ.10 கோடி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெக்ஸாஸ் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம், மலேசியா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் வகையில் ஆண்டுதோறும் இளந்தமிழர் இலக்கியப்பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பை முதல்- அமைச்சர் விரைவில் வெளியிட உள்ளார்.

உலக அளவில் இருக்கும் தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உலக தமிழ் சங்கங்களின் மாநாடு, இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் 25 நாடுகளில் இருந்தும் தமிழகம் மட்டுமின்றி 10 வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ் சங்கங்கள் பங்கேற்கின்றன இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் வினய், உலக தமிழ்ச்சங்க இயக்குனர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறந்த படைப்புகள், சிறந்த பதிப்பகத்துக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
1 More update

Next Story