வாடகை பாக்கி தராததால் தண்ணீர் லாரிகள் திடீர் வேலை நிறுத்தம் 4 மணி நேரம் குடிநீர் வினியோகம் பாதிப்பு

சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலையத்தின் எதிரே லாரிகளை நிறுத்தி அதன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
பெரம்பூர்,
சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான குடிநீரேற்று நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வரும் தண்ணீர் லாரிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வாடகை பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், லாரிகளின் பராமரிப்பு செலவுக்கு பணம் இன்றி அவதிப்படுவதாக கூறி வாடகை பாக்கியை தராததால் தண்ணீர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யமாட்டோம் என்று கூறி நேற்று குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தின் எதிரே தண்ணீர் லாரிகளை நிறுத்தி, திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 மணி நேரம் பாதிப்பு
இதனால் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக தடைபட்டது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பரிதவித்தனர். மேலும் எண்ணூர் நெடுஞ்சாலையோரத்தில் தண்ணீர் லாரிகளை வரிசையாக நிறுத்தி வைத்து இருந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதையொட்டி ஆர்.கே.நகர் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதையடுத்து குடிநீர் வாரிய உதவி பொறியாளர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தண்ணீர் லாரி உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி மேல் அதிகாரிகளிடம் பேசி, 2 நாட்களுக்குள் லாரி வாடகை பாக்கியை கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
அதை ஏற்று சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு தண்ணீர் லாரி உரிமையாளர்கள், தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வழக்கம்போல் குடிநீரேற்று நிலையத்தில் இருந்து லாரிகளில் தண்ணீர் பிடித்து சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
Related Tags :
Next Story