தேன்கனிக்கோட்டை அருகே காளை முட்டியதில் தொழிலாளி பலி எருதுவிடும் விழாவை காண சென்ற போது பரிதாபம்


தேன்கனிக்கோட்டை அருகே காளை முட்டியதில் தொழிலாளி பலி எருதுவிடும் விழாவை காண சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 2 March 2020 5:00 AM IST (Updated: 2 March 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே எருதுவிடும் விழாவை காண சென்ற போது காளை முட்டியதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மல்லிகார்ஜூன மலையில் பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலின் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. இந்த விழாவை காண திரளான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அதே போல தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கேரட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சின்னபையன் என்கிற முனியப்பா (வயது 38) என்பவரும் எருதுவிடும் விழாவை காண வந்திருந்தார்.

தொழிலாளி பலி

மைதானத்தில் எருதுகள் அவிழ்த்து விடப்பட்ட போது அவைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் மைதானத்தில் ஒரு காளையை விழாக்குழுவினர் அவிழ்த்து விட்டனர். அந்த காளை ஆக்ரோ‌‌ஷமாக துள்ளிக்குதித்து ஓடியது.

அப்போது திடீரென அது பொதுமக்களின் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் பயந்து போன பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த நேரம் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த தொழிலாளி முனியப்பாவை காளை முட்டி தனது கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முனியப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

20 பேர் காயம்

மேலும் காளை முட்டியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு சென்று முனியப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எருதுவிடும் விழாவை காண சென்ற போது காளை முட்டியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story