நாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பேரணி


நாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பேரணி
x
தினத்தந்தி 2 March 2020 5:30 AM IST (Updated: 2 March 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பா.ஜ.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பிரமாண்டமான பேரணி நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இந்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக பேரணி, விளக்க பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது. இதேபோல் தான் தமிழகத்திலும் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், அந்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளை தவறாக வழிநடத்தும் சில கட்சிகளை கண்டித்தும் நேற்று மாலை நாகர்கோவிலில் பா.ஜனதா சார்பில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன், மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி மற்றும் வேலூர் இப்ராகிம் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியானது பார்வதிபுரத்தில் தொடங்கி, டெரிக் சந்திப்பு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் பேச்சு

பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் பேசியதாவது:-

“1947-ம் ஆண்டு நாடு பிரிக்கப்படுகிறது. பாகிஸ்தானை பெற்று விட்டோம் என்று ஜின்னா மகிழ்ச்சியில் இருந்தார். இந்திய மக்கள் சோகத்தில் இருந்தார்கள். போராடி பாகிஸ்தானை பெற்றிருக்கிறோம். இனி சிரித்துக்கொண்டே இந்துஸ்தானை பிடிப்போம் என்றார் ஜின்னா. மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்த பிறகு லட்சக்கணக்கான இந்துக்கள் துரத்தி அடிக்கப்பட்டு அகதிகளானார்கள். மேலும் இந்துக்கள் மதமாற்றப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இதை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பேசியிருக்க வேண்டுமே. ஏன் பேசவில்லை. மத தலைவர்கள் எங்கே போனார்கள்.

ஆகவே போராடும் இஸ்லாமிய சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள். சில கட்சிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்து விடாதீர்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் தான் பயப்பட வேண்டும். இந்திய முஸ்லிம் மக்களுக்கு என்றும் பா.ஜனதா கட்சி பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வாறு பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் பேசினார்.

முரளிதரராவ்

பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது:- இந்திய நாட்டின் கடைசி மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. கா‌‌ஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் மு.க.ஸ்டாலின் பேரணி நடத்தினாலும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டை விட்டு போகாது. நாட்டில் வன்முறையை தூண்டிவிட்டு பலரை கொன்று மோடி அரசை வெளியேற்றலாம் என காங்கிரஸ், தி.மு.க.வுடன் சேர்ந்து சில கட்சிகளும், மத தலைவர்களும் நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

மு.க.ஸ்டாலின், முஸ்லிம் லீக் சொல்வதை கேட்டு செயல்படுகிறார்.

இலங்கை தமிழர்கள் கொலை

இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடியை சிறந்த தலைவர் என்றும், பா.ஜனதா கட்சி பலம் வாய்ந்த கட்சி என்றும் தெரிவித்துள்ளார். பா.ஜனதா கட்சியால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்கிறார், மு.க.ஸ்டாலின். பாகிஸ்தான், ஈரான், சிரியா, துருக்கியில் அதிக முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதுதான் இந்தியா.

தமிழ் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது, தி.மு.க., இலங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படும்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி. நீங்களா தமிழர்களை காப்பாற்ற போகிறீர்கள். அன்று தமிழர்களை காக்க தைரியம் இல்லை. இப்போது மோடி ஆட்சியில் உலகெங்கும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய வாழ் முஸ்லிம்களுக்கு துன்பம் இல்லை.

இவ்வாறு முரளிதரராவ் பேசினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

முன்னதாக பேரணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நாகர்கோவிலின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் தேசிய கொடி ஏந்தியும், மோடி உருவம் கொண்ட முகமூடியை சிலரும் அணிந்திருந்தனர். பேரணியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தில், பா.ஜனதா நிர்வாகிகள் ராஜன், நாகராஜன், முத்துராமன், தேவ், மீனாதேவ், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story