குடியாத்தம் அருகே மின்வேலியில் சிக்கி இறந்த யானை உடல் தோண்டி எடுப்பு
குடியாத்தம் அருகே வனத்துறையினருக்கு தெரியாமல் யானை புதைக்கப்பட்ட நிலத்துக்காரர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் புதைக்கப்பட்ட யானையின் உடலை வனத்துறையினர் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபின் அதே இடத்தில் புதைத்தனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் ஒன்றியம் மோடி குப்பம் ஊராட்சி மத்தேட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு அதே பகுதியில் உள்ள குடிமிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தை குடிமிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி (வயது 50) என்பவர் குத்தகை எடுத்து பயிர் செய்து வருகிறார். அப்பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இந்த நிலையில் பிச்சாண்டி தன் நிலத்தை சுற்றிலும் வன விலங்குகள் புகாவண்ணம் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்து இருந்தார். இந்த பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக காட்டு யானைகள் கூட்டம் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. மேலும் அரிசி ஆலைக்குள்ளும் புகுந்து அரிசி மூட்டைகளை தின்று தீர்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. அவற்றை வனத்துறையினர் விரட்டினாலும் கண்ணாமூச்சி விளையாடுவதுபோல் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடுவதும் வருவதுமாக இருந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானை பிச்சாண்டியின் குத்தகை நிலத்திற்குள் நுழைய முயன்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. அதிகாலை அங்கு வந்த பிச்சாண்டி வனத்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்து தென்னை ஓலைகளை எடுத்து வந்து யானை இறந்து இருப்பது வெளியே தெரியாமல் இருக்க அதன் மீது அடுக்கி மூடினார்.
பின்னர் கிராம மக்கள் நடமாட்டம் குறைந்தபின் ஞாயிற்றுக்கிழமை மாலை குடியாத்தத்தை அடுத்த ராமாலை தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரின் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து நிலத்தில் ராட்சத பள்ளம் தோண்டினார். பின்னர் மின்சாரம் தாக்கி இறந்த யானையை பொக்லைன் எந்திரம் மூலம் அந்த குழிக்குள் தள்ளி மூடியுள்ளனர். அதோடு பிரச்சினை முடிந்து விட்டது என பிச்சாண்டி லேசாக நிம்மதி அடைந்தார்.
ஆனால் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு அரசல்புரசலாக தகவல் பரவியது. அதனை அறிந்தவர்கள் கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா ஆகியோருக்கு தகவல் அனுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டரும் மாவட்ட வன அலுவலரும் வனத்துறையினருக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து குடியாத்தம் வனத்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிச்சாண்டி நிலத்தில் ஒரு பகுதியில் புதிதாக மண் தோண்டி மூடப்பட்டது தெரியவந்தது. மேல் மட்டமாக அதை தோண்டி பார்க்கும்போது துர்நாற்றமும் அங்கே யானை புதைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த செய்தி ‘தினத்தந்தி’யில் மட்டும் நேற்று பிரத்யேகமாக வெளிவந்தது.
அதன்பின் நேற்று காலை கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா, குடியாத்தம் தாசில்தார் வத்சலா,உதவி வனபாதுகாவலர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, குடியாத்தம் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) சங்கரய்யா வனவர்கள் ரவி,பிரகாஷ், ஹரி ஆகியோர் முன்னிலையில் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் இரண்டரை மணிநேரம் யானை புதைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக தோண்டப்பட்டது. அங்கு புதைக்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.
தயாராக இருந்த 4 கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். தடயங்களை சேகரித்தபின் யானையை அதே பள்ளத்தில் இறக்கி அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே நிலத்தின் குத்தகைதாரர் பிச்சாண்டி தப்பி ஓடிவிட்டார். அது குறித்து குடியாத்தம் வனத்துறையினர் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிச்சாண்டியை தேடிவருகின்றனர். மேலும் யானையின் உடலை புதைக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் மற்றும் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி டி.பி.பாளையம் பகுதியில் ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி இறந்து, இரண்டு மாதங்கள் ஆன நிலையில் குடியாத்தம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. இரண்டு மாதத்தில் இரண்டு காட்டு யானைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது ஒரு தகவலை மறைத்தால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் என உதாரணம் கூறுவார்கள். ஆனால் மிகப்பெரிய உருவம் கொண்ட காட்டுயானையையே ராட்சத பள்ளம் தோண்டி புதைத்த சம்பவத்தை மறைத்ததில் பின்னணியில் யாரும் உள்ளார்களா? என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story