‘சீல்’ வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளை வரைமுறைப்படுத்தி மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் சங்கத்தினர் மனு


‘சீல்’ வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளை வரைமுறைப்படுத்தி மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 2 March 2020 11:30 PM GMT (Updated: 2 March 2020 7:19 PM GMT)

‘சீல்’ வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளை வரைமுறைப்படுத்தி மீண்டும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் 250-க்கும் மேற்பட்டோர் திருச்சி மண்டல ஆலோசகர் செய்யதுபாரூக், கோட்டை பொறுப்பாளர் அம்புரோஸ் ஆகியோர் தலைமையில் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பான சுத்தமான மற்றும் சுகாதாரமான அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைகள் நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி சான்றுகள் பெற்று நாகை மாவட்டத்தில் 17 குடிநீர் ஆலைகள் இயங்கி வந்தன. இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி நிலத்தடி நீர் தடையில்லா சான்று பெற்ற நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்று திடீரென அறிவிக்கப்பட்டு, நாகை மாவட்டத்தில் 16 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டது. இந்த தொழிலை நம்பி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

‘சீல்’ வைப்பு

வங்கிகளில் கடன் வாங்கி தான் ஆலைகளை நடத்தி வருகிறோம். அதே போல் டீலர்களும் கடன் வாங்கி தான் தங்களது கடைகளில் வைத்து தண்ணீர் கேன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உப்பு நீர் மட்டுமே உள்ளது. இதனால் நிலத்தடி நீரை நம்பி நாகை மாவட்ட மக்கள் இல்லை. கேன் வாட்டர்களை நம்பி தான் பெரும்பாலானோர் உள்ளனர். எவ்வித அறிவிப்பும் இன்றி திடீரென குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்திருப்பது எல்லோரையும் பாதிக்கக்கூடியதாக உள்ளது.தற்போது நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அரசுக்கு வரி செலுத்தியும் திடீரென குடிநீர் ஆலைகளை மூடுவது சரியில்லை. எனவே சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளை வரைமுறைப்படுத்தி மீண்டும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுமனைப்பட்டா

வேதாரண்யம் அருகே நாலுவேதபதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் அருகே நாலுவேதபதி அம்பேத்கர் தெருவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல தலைமுறைகளாக வசித்து வரும் எங்களுக்கு வீட்டு மனை பட்டா இல்லை. இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Next Story