மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைப்பு இல்லை - மாணிக்கம்தாகூர் எம்.பி. கண்டனம்


மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைப்பு இல்லை - மாணிக்கம்தாகூர் எம்.பி. கண்டனம்
x
தினத்தந்தி 3 March 2020 4:00 AM IST (Updated: 3 March 2020 1:24 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு முறைப்படி தமக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார். விருதுநகர் எம்.பி.மாணிக்கம்தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

விருதுநகரில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் அமைய உள்ள மருத்துவ கல்லூரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமையில் நடந்த இந்த விழாவில் துணை-முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவிழாவில் ரூ.444 கோடி மதிப்பீட்டில் கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட வேண்டுமென நானும் முயற்சிகள் மேற்கொண்டேன். அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் விருதுநகர் தொகுதி எம்.பி. என்ற முறையில் நானும் இந்த விழாவில் கலந்து கொண்டு தொகுதி மக்களின் தேவைகள் குறித்து தெரிவிக்க எண்ணி இருந்தேன். மேலும் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் எனது தொகுதிக்கு வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து வரவேற்பதுடன் விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கவும் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசே நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் எனக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பாமல் நான் நாடாளுமன்ற கூட்ட தொடருக்கு புறப்பட்டு சென்றபின் விருதுநகரிலுள்ள எனது அலுவலகத்தில் விழா நடந்த நேற்று முன் தினம் மதியம் 12.30 மணிக்கு மேல் காலம் தாழ்த்தி அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.

விழா 3 மணிக்கு தொடங்கும் நிலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ் கொடுப்பது என்பது அவரை புறக்கணிப்பது போல் ஆகும். இதனால் நான் விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதோடு, மத்திய மந்திரியையும் தனிப்பட்ட முறையிலும் கூட சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு தொகுதி எம்.பி.என்ற முறையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் ஒத்துழைப்பு நல்கி வருகிறேன். ஆனாலும் முதல்-அமைச்சர் மற்றும் மத்திய மந்திரி கலந்து கொள்ளும் அரசு விழாவுக்கு உள் நோக்கத்தோடு எனக்கு அழைப்பிதழ் உரிய நேரத்தில் அனுப்பாமல் புறக்கணித்து உள்ளதாக கருதுகிறேன். தொகுதி மக்களுக்காக சேவை ஆற்றி வரும் என்னை அரசு திட்ட தொடக்க விழாவுக்கு அழைக்காமல் புறக்கணித்திருப்பது குறித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் முறையிடுவேன்.

மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் என்னை புறக்கணித்து இருந்தாலும், விருதுநகர் மாவட்ட மக்களுக்கு என்றும் போல் எனது சேவை தொடரும். மக்கள் தேவை அறிந்து செயலாற்றி வரும் மக்கள் பிரதிநிதியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு புறக்கணிப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story