முகநூலில் சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்ட ஓட்டல் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது


முகநூலில் சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்ட ஓட்டல் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 2 March 2020 10:30 PM GMT (Updated: 2 March 2020 8:29 PM GMT)

முகநூலில் சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்ட ஓட்டல் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,

சிறுமிகளின் ஆபாச படங்களை தடை செய்யப்பட்ட இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் அதை முகநூல், வாட்ஸ்அப் போன்ற இணையதளத்தில் வெளியிடுவோர்களின் பட்டியலை தமிழக போலீசார் தயார் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக, சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை முகநூலில் வெளியிட்ட யோகேஷ்வரன் (வயது 35) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு பாப்பாத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருடைய மகன் யோகேஷ்வரன். திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய முகநூல் கணக்கில் கடந்த ஆண்டில் சிறுமிகளில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் பிரகாஷ் என்பவர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட முகநூல் கணக்கில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை சோதனை செய்தனர். அப்போது அது யோகேஷ்வரனின் சிம்கார்டு எண் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவர் தனது முகநூலை, பாலியல் நோக்கங்களுக்காக தவறான முறையில் பயன்படுத்தியதும், குழந்தைகளை பாலியல் கற்றலுக்கு தூண்டும் வகையில் முகநூலை பயன்படுத்தி, சமூக சீர்கேட்டிற்கு காரணமாக இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வீரப்பன் சத்திரம் போலீசார் யோகேஷ்வரன் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் யோகேஷ்வரன் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story