விஜயாப்புராவில் பட்டப்பகலில் துணிகரம் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்


விஜயாப்புராவில் பட்டப்பகலில் துணிகரம் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 3 March 2020 3:18 AM IST (Updated: 3 March 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புராவில் பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற துணிகரம் நடந்துள்ளது. எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.

பெங்களூரு,

விஜயாப்புரா மாவட்டம் ஏ.பி.எம்.சி. போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆசிரம ரோட்டில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. இங்கு பொதுமக்கள் தங்க நகைகளை அடகு வைத்து வட்டிக்கு பணம் பெற்று வந்தனர். நேற்று காலையில் நிதி நிறுவனத்தை திறந்து மேலாளர், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். காலை 9.30 மணியளவில் தங்க மோதிரத்தை அடகு வைக்க வேண்டும் என்று கூறி 4 மா்மநபர்கள் வந்தனர்.

அந்த மர்மநபர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ஊழியர்களை மிரட்டினார்கள். மேலும் நிறுவனத்தில் உள்ள நகைகள், பணத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் கொலை செய்து விடுவதாகவும் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தார்கள்.

அந்த சமயத்தில் நிறுவனத்தின் மேலாளர் சுதாரித்து கொண்டு அங்கிருந்த எச்சரிக்கை மணிக்கான பட்டனை அழுத்தினார். இதனால் பலத்த சத்தத்துடன் எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனே அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் நிதி நிறுவனத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் நகைகள், பணம் தப்பியது. தகவல் அறிந்ததும் விஜயாப்புரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுபம் அகர்வால், ஏ.பி.எம்.சி. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அனுபம் அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில், நிதி நிறுவனத்தில் புகுந்த 4 மர்மநபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். துப்பாக்கியால் மர்மநபர்கள் சுடவில்லை. அது உண்மையான துப்பாக்கியா?, பொம்மை துப்பாக்கியா? என்பது தெரியவில்லை. மேலாளர் சுதாரித்து கொண்டு எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்ததால் பயத்தில் மர்மநபர்கள் ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், என்றார்.

இதற்கிடையில், மர்மநபர்கள் 4 பேர் நிதி நிறுவனத்திற்குள் வருவது, அங்குள்ள ஊழியர்களிடம் கத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் மூலமாக 4 மர்மநபர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஏ.பி.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் விஜயாப்புராவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story