பெங்களூரு, மங்களூரு விமான நிலையங்களில் மருத்துவ குழுவினர் அமைப்பு


பெங்களூரு, மங்களூரு விமான நிலையங்களில் மருத்துவ குழுவினர் அமைப்பு
x
தினத்தந்தி 3 March 2020 11:00 PM GMT (Updated: 3 March 2020 4:57 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் பெங்களூரு, மங்களூரு விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரையும் மருத்துவ குழுவினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

பெங்களூரு, 

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே அமைந்துள்ள பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவக்குழுவினர் அமைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அங்கு வரும் பயணிகளை மருத்துவக்குழுவினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள். காய்ச்சல், இருமல், சளி பிரச்சினை போன்றவை இருந்தால் உடனடியாக அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மங்களூருவில் உள்ள வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.

கர்நாடக மாநில எல்லைப்பகுதிகளான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களையொட்டி அமைந்திருக்கும் மாவட்டங்களிலும், கலபுரகி, பெலகாவி, சாம்ராஜ்நகர், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களிலும் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் கம்பெனிகளில் பணியாற்றி வருபவர்களை கண்காணிக்க சுகாதார துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு செகந்திராபாத்தில் உள்ள ஒரு அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், பின்னர் அவர் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலும் மருத்துவக்குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வரும் பயணிகளை சோதனை செய்து வருகிறார்கள். மேலும் விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் உள்பட அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்பேரில் பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இருக்கிறார்கள். இதுபற்றி பெங்களூரு புறநகர் மாவட்ட துணை சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுளா கூறியதாவது:-

ஒரு சுகாதாரத்துறை அதிகாரி, ஒரு டாக்டர் உள்பட ஒரு மருத்துவக்குழு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளையும் அவர்கள் பரிசோதனையிட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதியிலும், அவர் வேலை பார்த்த நிறுவனத்திலும் மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த அனைவரையும் சோதித்து பார்த்தனர். இதில் வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story