பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு


பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 4 March 2020 5:00 AM IST (Updated: 3 March 2020 10:52 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் தொடர்பான பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகத்தினை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை.

ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.

அலுவலர்களுக்கு உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான குடிநீர் வழங்கிடவும், குடிநீர் தேவை உள்ள இடங்களுக்கு புதிதாக மாற்று ஆழ்துளை அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் காணப்படும் முறையற்ற குடிநீர் இணைப்புகள் விதிமுறைகளின் படி உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 38 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொடர்பான பணிகளையும் உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது என்றார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story