கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடகத்தில் உஷார்நிலை ; சுகாதாரத்துறை மந்திரி அறிவிப்பு


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடகத்தில் உஷார்நிலை ; சுகாதாரத்துறை மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 4 March 2020 5:30 AM IST (Updated: 4 March 2020 12:33 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயரை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உஷார்நிலை அமல் படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு நேற்று அறிவித்தார்.

பெங்களூரு, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 85 ஆயிரம் பேர் அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் 3 பேரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது டெல்லி, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும், கர்நாடக அரசு எடுத்துள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“இந்தியாவில் இதுவரை 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் கேரளாவில் 3 பேர், டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 6 பேரில் ஒருவர் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவர் துபாய்க்கு சென்றுவிட்டு, கடந்த மாதம்(பிப்ரவரி) பெங்களூரு வந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று முடிவு வந்தது.

அவர் பெங்களூருவுக்கு வந்த பிறகு தனது சொந்த ஊரான தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு இங்கிருந்து பஸ்சில் சென்றுள்ளார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது ரத்த மாதிரியை எடுத்து சோதித்து பார்த்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் 24 மணி நேரமும் உஷார்நிலையில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். கொரோனா வைரசை கண்டுபிடிக்க ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரி மற்றும் பெங்களூரு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 2 ஆய்வு கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்த 2 ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனி வார்டுகள் மற்றும் அவற்றுக்கு தேவையான மருந்து-மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தை பொறுத்தவரையில் இதுவரை இந்த வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால் கர்நாடக மக்கள் இந்த வைரசை கண்டு பீதியடைய தேவை இல்லை. தேவையற்ற வதந்தி மற்றும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். ஊடகங்கள் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெங்களூரு, மங்களூரு உள்பட கர்நாடகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளன. சீனா உள்பட அந்த வைரஸ் பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படு கிறார்கள். அந்த வைரஸ் அறிகுறி உள்ள பயணிகள், தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்கள் அவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் 15 படுக்கைகள், மங்களூருவில் உள்ள வென்லாக் ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஜெயநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் இந்திரா நகரில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 முக்கியமான தனியார் ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 2,319 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ரெயில் நிலையங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

விமான நிலையங்களில் இதுவரை 39 ஆயிரத்து 990 பேர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் அந்த ைவரஸ் அறிகுறி இருந்த 245 பேரின் ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 240 பேருக்கு அந்த வைரஸ் தாக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.”

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

Next Story