மதுக்கூர் அருகே குப்பை மேட்டில் தீப்பிடித்தது புகை மூட்டத்தால் மக்கள் அவதி


மதுக்கூர் அருகே குப்பை மேட்டில் தீப்பிடித்தது புகை மூட்டத்தால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 4 March 2020 5:00 AM IST (Updated: 4 March 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கூர் அருகே குப்பை மேட்டில் தீப்பிடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மக்கள் அவதிப்பட்டனர்.

மதுக்கூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாலையில் மதுக்கூர் அருகே உள்ள சங்குனி குளத்தில் துப்புரவு தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை லாரியில் கொண்டு வந்து கொட்டியதால் சங்குனி குளம் முற்றிலும் தூர்ந்தது. இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதன்விளைவாக குளத்துக்கு லாரிகள் செல்ல வழி இல்லாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டு குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டது. சம்பவத்தன்று இந்த குப்பை மேட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் தீயின் வேகம் அதிகரித்ததால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களும் இந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.

குப்பைகளை அகற்ற கோரிக்கை

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சங்கிலி குளத்தில் சில நாட்களாக குப்பைகளை கொட்டாமல் இருந்தது எங்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. இந்த குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு அளிப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் குப்பைகளை அகற்றாமல் தற்போது தீப்பிடித்து புகை மூட்ட மண்டலமாக காட்சியளிக்கிறது. புகையுடன் துர்நாற்றம் வீசுவதால் சுவாசிப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story