54 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு: உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் - கேன் குடிநீர் கடும் தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 54 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து உற்பத்தியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் கேன் குடிநீர் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் அனுமதியின்றி தனியார் குடிநீர் சுத்தி கரிப்பு ஆலைகள் இயங்குவதாகவும், இந்த ஆலைகள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சுவதால் குடியிருப்பு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகம் முழுவதும் அனுமதியின்றி இயங்கும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை கண்டறிந்து அதன் மீது சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது.
அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் உரிய அனுமதி பெறாமலும், உரிமம் காலாவதியான பிறகும் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை கண்டறிந்து அவற்றை பூட்டி ‘சீல்’ வைக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் விழுப்புரம் அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி கிரண்குராலா ஆகியோர் அறிவுறுத்தினர்.
இதன் அடிப்படையில் கடந்த 5 நாட்களாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விழுப்புரம் கோட்டத்தில் 24 ஆலைகளும், திண்டிவனம் கோட்டத்தில் 8 ஆலைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் கோட்டத்தில் மேலும் 2 ஆலைகளும், திண்டிவனம் கோட்டத்தில் 2 ஆலைகளும் ஆக மொத்தம் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 36 குடிநீர் ஆலைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 ஆலைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். நேற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும், நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்கித்தர வேண்டும் என வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் நேற்றும் 6-வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது.
இந்த போராட்டம் காரணமாக கடந்த 4 நாட்களாக கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கேன் குடிநீர், வீடுகள், கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டன. இவை முழுவதும் வினியோகிக்கப்பட்ட சூழலில் கடந்த 2 நாட்களாக கேன் குடிநீருக்கு முற்றிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. வீடுகள், கடைகள் மட்டுமின்றி ஓட்டல்கள், திருமண மண்டபங்களுக்கு குடிநீர் கேன்கள் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது.
இதனால் கேன் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக நகர் பகுதிகளில் பெரும்பாலானோர் கேன் குடிநீர் பயன்படுத்தி வருகிற நிலையில் தற்போது அதன் வரத்து இல்லாததால் தெருக்களில் உள்ள பொது குடிநீர் குழாய்களில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு தண்ணீர் பிடிக்கின்றனர், மேலும் வாகனங்களில் வரும் தண்ணீரையும் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 54 குடிநீர் ஆலைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 குடிநீர் ஆலைகளும் ஆக மொத்தம் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 76 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் 36 ஆலைகளையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 ஆலைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது ஒருபுறம் இருந்தாலும் கேன் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆலைகள் மூடப்பட்டதன் மூலம் ஒரு ஆலையில் பணியாற்றி வரும் 25 தொழிலாளர்களும், அதன் மூலம் கேன் வினியோகிக்கக்கூடிய 100 வினியோகஸ்தர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒவ்வொரு ஆலையின் மூலம் பயன்பெறக்கூடிய 5 ஆயிரம் உபயோகிப்பாளர்களும் கேன் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே மூடப்பட்ட ஆலைகளை உடனே திறக்க வேண்டும், நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை எங்களுக்கு அரசு உருவாக்கித்தர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், அனுமதியின்றி இயங்கிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள், ஐகோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டுள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் கோரி புதியதாக விண்ணப்பிப்போருக்கு அரசு விதிமுறைப்படி முறையாக அணுகினால் அனுமதி வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story