கிருஷ்ணகிரியில் ரூ.348 கோடியில் உருவாகும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை: ஒரு ஆண்டில் பணிகளை முடிக்க திட்டம்


கிருஷ்ணகிரியில் ரூ.348 கோடியில் உருவாகும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை: ஒரு ஆண்டில் பணிகளை முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 4 March 2020 11:26 AM IST (Updated: 4 March 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் ரூ.348 கோடி செலவில் அமைய உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்லூரி
ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் 2004-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. மாவட்டத்தில் மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் கலெக்டர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்கள், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளியில் அமைந்துள்ளன.

கிருஷ்ணகிரி நகரில் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் பகுதி அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என இந்த மாவட்ட மக்கள் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்த போது இருந்தே கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரூ.348 கோடியில் மருத்துவக்கல்லூரி
இந்த நிலையில், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக போலுப்பள்ளியில் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.348 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, குடியிருப்புகள் தனித்தனியாக அமைகிறது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2021-22-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இக்கல்லூரியில் 150 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு வசதிகளுடன் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகளும், செவிலியர்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்பட உள்ளன. சுமார் ஓராண்டுக்குள் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

உயர்தர சிகிச்சை
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் உயர்தர சிகிச்சை பெற தர்மபுரி, சேலம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்று வருகின்றனர். கிருஷ்ணகிரியில் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், விபத்தில் காயங்களுடன் வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.

பின்னர், இங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். இதனால் சிகிச்சைக்கு செல்லும் பலர் வழியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது.

தற்போது, கிருஷ்ணகிரியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைவதன் மூலம் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு உயர்தர சிகிச்சைகள் கிடைக்கும் என்று அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
1 More update

Next Story