வானவில்: சீறிப்பாய வருகிறது ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள்

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஹஸ்க் வர்னா நிறுவனத்தின் சீறிப்பாயும் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஹஸ்க் வர்னா நிறுவனத்தின் சீறிப்பாயும் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிறுவனத்தின் பிரபல மாடலான விட்பிலென் 250 மற்றும் ஸ்வார்ட்பிலென் 250 ஆகிய இரண்டு மாடல் மோட்டார் சைக்கிளும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் விட்பிலென் மாடலானது கபே ரேஸர் ஸ்டைல் மோட்டார் பைக்காகும். இரண்டு மாடல் மோட்டார் சைக்கிளுமே அறிமுக சலுகை விலையாக சுமார் ரூ.1.80 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது இளைஞர்களின் ஏகோபித்த மாடலாகத் திகழும் கே.டி.எம் 200. டியூக் மாடல் மோட்டார் சைக்கிளை விட 250 சி.சி. திறன் கொண்ட ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள் விலை ரூ.7 ஆயிரம் மட்டுமே அதிகமாகும். கே.டி.எம். இந்தியா நிறுவனம் முதலில் ஹஸ்க்வர்னா பிராண்ட் மோட்டார் சைக்கிள் பிரீமியம் பிராண்டாக அதாவது கே.டி.எம். பிராண்டை விட அதிக விலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது இதன் விலை வித்தியாசம் அதிகம் இல்லை. அறிமுக சலுகை எவ்வளவு காலம் வரை நீடிக்கிறது என்பதிலும், அதற்குப் பிறகு இவற்றின் விலை எவ்வளவு என்பதிலிருந்து இதன் விற்பனை வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ளலாம். சுவீடன் தயாரிப்பான ஹஸ்க்வர்னா இப்போது விலை நிர்ணயத்தில் கே.டி.எம். தயாரிப்புகளுக்கு கடும் போட்டியாக விளங்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள்கள் கே.டி.எம். விற்பனையகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக விற்பனையகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இம்மாதத்திற்குள் 45 நகரங்களில் உள்ள 100 விற்பனையகங்கள் இதற்காக தரம் உயர்த்தப்பட உள்ளன. அதேபோல அடுத்த 5 மாதங்களில் விற்பனையகங்களின் எண்ணிக்கை 400 ஆகவும் கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை 275 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள்ள என்ஜின் 248.8 சி.சி. திறன் கொண்டது. லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் மோட்டாருடன் 6 கியர்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 30 ஹெச்.பி. திறனை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சி வேகத்திலும், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,500 ஆர்.பி.எம். சுழற்சி வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் எடை 153 கிலோ மட்டுமே. அலாய் சக்கரங் களைக் கொண்டதாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story